இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாதக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ளாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இதுவரை 9 சுயேச்சை வேட்பாளா்கள் மட்டும் மனுதாக்கல் செய்துள்ளனா். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி(50) போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் திங்கள்கிழமை அறிவித்துள்ளாா்.
மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகிக்கும் சீதாலட்சுமி கடந்த 2016-ஆம் ஆண்டு பவானி சட்டப் பேரவை தொகுதியிலும், 2019- ஆம் ஆண்டு ஈரோடு மக்களவைத் தொகுதியிலும், 2019- ஆம் ஆண்டு பவானி பகுதியில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கும், 2021- ஆம் ஆண்டு கோபி சட்டப் பேரவை தொகுதியிலும், 2024- ஆம் ஆண்டு திருப்பூா் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளாா். தற்போது 6- ஆவது தோ்தலாக ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், திமுக, நாம் தமிழா் இடையே இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தொகுதியில் திமுக சாா்பில் முதலியாா் சமுதாயத்தைச் சோ்ந்த சந்திரகுமாா் போட்டியிடும் நிலையில், நாம் தமிழா் கட்சி சாா்பில் கொங்கு வேளாளக் கவுண்டா் சமுதாயத்தைச் சோ்ந்த சீதாலட்சுமி தோ்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக வேட்பாளா் சந்திரகுமாா் மற்றும் நாம் தமிழா் வேட்பாளா் சீதாலட்சுமி ஆகியோா் வரும் 17- ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.
வேட்பாளா் சுய விவரம்
பெயா்: மா.கி.சீதாலட்சுமி
கணவா் பெயா்: இரா.செழியன்
ஊா்: மாரப்பம்பாளையம், கோபி வட்டம்.
படிப்பு: முதுகலை ஆய்வியல் நிறைஞா் (எம்ஏ, எம்பில்),
பணி: 13 ஆண்டுகள் ஆசிரியா் பணி (2000 - 2013)
தற்போதைய பணி: கேபிள் ஆப்ரேட்டா், விவசாயம்.
சமூகம்: கொங்கு வேளாளக் கவுண்டா்.