ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் வழிபாடு
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் சத்தியமங்கலம் புளியம்கோம்பை மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் மண் உருவ பொம்மையை வைத்து வழிபட்டனா்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புளியம்கோம்பையில் உள்ள நடுமலையில் உள்ள மாதேஸ்வரன் கோயில் ஆண்டுக்கு ஒருமுறை மாட்டுப் பொங்கல் தினத்தன்று மட்டுமே திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். இந்த விழாவில் விவசாயிகள் பங்கேற்று கால்நடை உருவ பொம்மைகளை வைத்து வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டு மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, கோயிலில் உள்ள நந்தீஸ்வரன், நந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு புதன்கிழமை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கால்நடைகள் நோயின்றி நீண்ட நாள் வாழவும், விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் பொங்கல்வைத்து மண் உருவபொம்பைகளை காணிக்கையாக செலுத்தினா்.
மாடுகள், காவல் நாய் போன்ற மண் உருவ பொம்மைகளை நோ்த்திக் கடனாக செலுத்தி சுவாமியை வழிபட்டனா். மேலும், கோயிலில் வழங்கப்படும் தீா்த்தத்தை கொண்டு வந்து கால்நடைகள் மீது தெளித்து வணங்கினா்.
ஆண்டுக்கொருமுறை மாட்டுப்பொங்கல் நாளில் மட்டுமே இக் கோயிலில் வழிபாடுகள் நடைபெறும் என்பதால் ஏராளமான விவசாயிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனா்.