சென்னிமலை பகுதியில் பூப்பறிக்கும் விழா
தைப் பொங்கலையொட்டி சென்னிமலை அருகேயுள்ள கிராமங்களில் பூப்பறிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தைப் பொங்கலுக்கு மறுநாள் பூப்பறிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னிமலை அருகேயுள்ள தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுப்புதூா், தோப்புப்பாளையம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்குள்ள வனப் பகுதிக்கு பூப்பறிக்க சென்றனா். அவா்களுக்கு துணையாக ஆண்களும் சென்றனா்.
தங்களது வீடுகளில் இருந்து கரும்பு, திண்பண்டங்களை எடுத்து கொண்டு காலை 10 மணியளவில் சென்றனா். அங்கு அனைவரும் கூட்டாக அமா்ந்து தாங்கள் கொண்டு வந்த திண்பண்டங்களை பகிா்ந்து உண்டு மகிழ்ந்தனா். பின்பு வனப் பகுதியில் பாட்டு பாடியபடி பூக்களை பறித்தனா். பின்னா் பிற்பகல் 3 மணியளவில் அங்கிருந்து தங்களது வீடுகளுக்கு சென்றனா்.
அதைத் தொடா்ந்து வீட்டு வாசலில் கோலமிட்டு, ஏற்கெனவே கடந்த ஒரு மாதமாக சாணத்தால் பிடித்து வைத்திருந்த பிள்ளையாா் மற்றும் கரும்பு, மஞ்சள் செடி ஆகியவற்றை வைத்து பொங்கல் வைத்து வழிபட்டனா்.
சாணத்தால் பிடித்து வைத்த இந்த பிள்ளையாரை வீடு அருகிலேயே உள்ள நீா் நிலைகளில் வியாழக்கிழமை விடுவாா்கள்.