ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக பதவியேற்றார் சந்திரகுமார்!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் சந்திரகுமார், எம்எல்ஏவாக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடாத நிலையில், சந்திரகுமாரை எதிர்த்து போட்டியிட்ட நாதக சீதாலட்சுமி உள்பட 45 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர்.
இதையும் படிக்க : அதிமுக பலவீனமடையக் கூடாது: திருமாவளவன்
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காலை சந்திரகுமாருக்கு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.