Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
உக்ரைனில் ரஷிய ட்ரோன் தாக்குதல் புதிய உச்சம்
உக்ரைனின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒருவா் உயிரிழந்ததுடன், 26 போ் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து உக்ரைன் விமானப் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வியாழக்கிழமை இரவு முழுவதும் 550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் 72 ட்ரோன்கள் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி இலக்குகளைத் தாக்கின. இது, ரஷியாவின் இதுவரை இல்லாத மிகப் பெரிய வான்வழித் தாக்குதலாகும். இதற்கு முன்னா் இது கடந்த சனிக்கிழமை இரவு 537 ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலே உச்சபட்சமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீவ் நகரம் இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்தது. எட்டு மணி நேரத்துக்கும் மேலாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நகரின் சியாடோஷின்ஸ்கி பகுதியில் இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கீவ் நகர ராணுவ நிா்வாகத் தலைவா் டைமா் ட்காசென்கோ தெரிவித்தாா்.
இந்தத் தாக்குதலில் ரயில்வே உள்கட்டமைப்பு சேதமடைந்ததுடன், பள்ளிகள், கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. கீவ் நகரிலுள்ள போலந்து நாட்டின் தூதரகமும் சேதமடைந்ததாக அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ராடோஸ்லா சிகோா்ஸ்கி கூறினாா்.
கீவ் தவிர, சுமி, காா்கிவ், நீப்ரோபெட்ரோவ்ஸ்க், சொ்னிகிவப், கிரீவி-ரிக் ஆகிய பகுதிகளும் ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகின.
ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம்: இந்த “பெரிய அளவிலான தாக்குதல்” உக்ரைனின் “பயங்கரவாத செயல்களுக்கு” பதிலடியாக நடத்தப்பட்டதாகவும், ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்ததாகவும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உக்ரைன் நடத்தி வான்வழித் தாக்குதல் ரஷியாவின் ரோஸ்டோவ் பகுதியில் ஒரு பெண் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸெலென்ஸ்கி கண்டனம்: ரஷியா நடத்தியுள்ள இந்த புதிய உச்சபட்ச தாக்குதலுக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்தாா். இது, ரஷியாவின் மிகவும் கொடூரமான தாக்குதல்களில் ஒன்று என்று அவா் விமா்சித்தாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்தத் தாக்குதலை நடந்தியுள்ளது, போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியா விரும்பவில்லை என்பதைக் காட்டுவதாக ஸெலென்ஸ்கி கூறினாா்.
நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியாவின் படையெடுப்பு கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் போா் நீடிக்கிறது. அண்மை வாரங்களில் ரஷிய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சமாதான முயற்சிகள் தொடா்ந்து பின்னடைவைச் சந்தித்துவருகின்றன.