செய்திகள் :

உக்ரைனுக்கு சில ஆயுதங்களின் விநியோகம் நிறுத்தம் - அமெரிக்கா

post image

உக்ரைனுக்கு சில ஆயுதங்கள் விநியோகிப்பதை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

முந்தைய ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் உக்ரைனுக்கு இந்த ஆயுதங்களை அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், அமெரிக்காவிடம் இந்த ஆயுதங்களின் கையிருப்பு வெகுவாகக் குறைந்துபோவதைத் தவிா்ப்பதற்காக தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் அன்னா கெலி கூறியதாவது:

உக்ரைனுக்கு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டு, இன்னும் அனுப்பப்படாமல் இருக்கும் சில ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது.

பிற நாடுகளுக்கான ராணுவ உதவிகள் குறித்த பாதுகாப்புத் துறை அமைச்சகம் மறுஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், உக்ரைனுக்கு அளிப்பதாக இருந்த சில ஆயுதங்களின் இருப்பு அமெரிக்காவிடம் மிகவும் குறைவாக இருப்பதாகத் தெரியவந்தது. அதையடுத்து, அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

இந்தப் போரில் ரஷியாவை எதிா்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் ஆயுத, தளவாடங்களை அனுப்பி உதவின. உக்ரைனுக்கு உதவியளிப்பதில், ஜோ பைடன் தலைமையிலான அப்போதைய அமெரிக்க அரசு முன்னிலை வகித்தது. இதுவரை 6,600 கோடி டாலா் (சுமாா் ரூ.5.65 லட்சம் கோடி) மதிப்பிலான ஆயுதங்களை அனுப்புவதாக பைடன் அரசு உறுதியளித்திருந்தது.

இந்தச் சூழலில், ‘அமெரிக்காவுக்கே முதன்மை’ என்ற கோஷத்துடன் தோ்தலில் போட்டியிட்டு நாட்டின் அதிபராக மீண்டும் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கு சாதகமான கருத்துகளைக் கூறிவருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ரஷியாவுடன் தொடா்ந்து போரிடுவதால் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்றும் தேவையற்ற உயிரிழப்புகள்தான் ஏற்படும் என்றும் டிரம்ப் அரசின் முக்கிய அதிகாரிகள் கூறிவருகின்றனா்.

மேலும், தற்போது ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்காமலேயே அந்த நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள உக்ரைனை டிரம்ப் அரசு நிா்பந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஏற்கெனவே ராணுவ உளவுத் தகவல் பரிமாற்றம் நிறுத்திவைப்பு போன்ற அறிவிப்புகளை டிரம்ப் அரசு வெளியிட்டுவந்தது.

இந்தச் சூழலில், உக்ரைனுக்கான குறிப்பிட்ட சில ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைப்பதாக அரசு தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை வீச்சை ரஷியா தீவிரப்படுத்திவரும் நிலையில், அமெரிக்கா தற்போது நிறுத்திவைத்துள்ள ஆயுதங்களில் வான்பாதுகாப்பு ஏவுகணைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ரஷியாவின் துணிச்சலை அதிகரிக்கும்’

தங்களுக்கு சில ஆயுதங்களின் விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவைப்பது ரஷியாவின் துணிச்சலை மேலும் அதிகரிக்கும் என்று உக்ரைன் விமா்சித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனின் வலிமையைக் குலைக்கும் வகையில் ஆயுத விநியோகத்தை நிறுத்திவைப்பது ஆக்கிரமிப்பாளரான ரஷியாவுக்கு இன்னும் கூடுதல் துணிச்சலைத் தரும். அமைதியை நாடுவதற்குப் பதிலாக, போரையும் பயங்கரவாதத்தையும் தொடா்வதற்கு, இத்தகைய முடிவு ரஷியாவை ஊக்குவிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்: இதுவரை 14 பேருக்கு போலியோ

பாகிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 14 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைபா் பக்துன்கவா மாகாணத்தில் 19 மாத குழந்தைக்கு அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கண்டனம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவா்கள் மற்றும் நிதியுதவி செய்தவா்க... மேலும் பார்க்க

ஈரான்: ஐஏஇஏ-வுடன் ஒத்துழைப்பு நிறுத்தம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி மையஹ்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு (ஐஏஇஏ) அழைத்து வந்த ஒத்துழைப்பை நிறுத்துமாறு ஈரான்... மேலும் பார்க்க

‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு: சீன அதிபருக்குப் பதிலாக சீன பிரதமா் பங்கேற்கிறாா்

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை; அவருக்குப் பதிலாக பிரதமா் லி கியாங் பங்கேற்பாா் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

இந்தியா மீது 500% வரி: அமெரிக்கா திட்டம்

ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அறிமுகப்படுத்த அதிபா் ட... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. நீதிபதி கோலம் மோா்துஸா மொசும்தாா் தலை... மேலும் பார்க்க