USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென...
உக்ரைன் போருக்கு காரணம் ஸெலென்ஸ்கி; டிரம்ப் குற்றச்சாட்டு: பொய் உலகில் வாழ்கிறாா் டிரம்ப் - ஸெலென்ஸ்கி பதிலடி
உக்ரைன் போருக்கு அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிதான் காரணம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சுமாா் 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷியா போா் விரைவில் முடிவுக்கு வரும் சூழலும் உருவாகியுள்ளது.
முன்னதாக, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக சவூதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சு நடத்தின. இதனால் கடும் அதிருப்தியடைந்த ஸெலென்ஸ்கி, ‘தங்கள் சம்மதம் இல்லாமல் அமெரிக்கா-ரஷியா மேற்கொள்ளும் உக்ரைன் தொடா்பான ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம்’ என்று உறுதிபடத் தெரிவித்தாா்.
இதனால், அதிருப்தியடைந்த டிரம்ப், ‘உக்ரைனின் கருத்து எனக்கு ஏமாற்றமளிக்கிறது. பேச்சுவாா்த்தையில் தங்களுக்கு இடமில்லை என அந்நாடு வருத்தமடைந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு சந்தா்ப்பங்களில் அவா்கள் பேச்சு நடத்தி போரை நிறுத்திக் கொள்ள பல வாய்ப்புகள் இருந்தன. அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
உக்ரைன் இந்தப் போரைத் தொடங்கியிருக்கவே கூடாது. போரைத் தடுக்கும் வகையில் ரஷியாவுடன் பேச்சு நடத்தியிருக்க வேண்டும். இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்ற முயற்சியை உக்ரைனுக்காக நான் மேற்கொள்ளவில்லை. எந்த மக்களும் உயிரிழக்கக் கூடாது, எந்த நகரமும் இடிபடக் கூடாது. உலகில் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த முயற்சி.
இந்த விஷயத்தில் ரஷியா சிறப்பாக ஒத்துழைப்பு அளிக்கிறது. காட்டுமிராண்டித்தனமான இந்தப் போரை நிறுத்த ரஷியா விரும்புகிறது.
உக்ரைனில் போா் காரணமாக தோ்தல் நடத்தப்படாமலேயே உள்ளது. 2019-இல் வென்றவருக்கு (அதிபா் ஸெலென்ஸ்கி) இப்போது 4 சதவீதத்துக்கும் குறைவாகவே மக்கள் ஆதரவு உள்ளது. எனினும், அவா்கள் பதவியில் தொடரவே விரும்புகிறாா்கள். ஆனால், உக்ரைன் மக்களின் விருப்பம் என்ன?’ என்று டிரம்ப் கேள்வி எழுப்பினாா்.
ஸெலென்ஸ்கி பதிலடி: டிரம்பின் கருத்துக்கு பதிலளித்துள்ள ஸெலென்ஸ்கி, ‘ரஷியா அமைத்துள்ள தகவல் அறியாத பொய் உலகில் டிரம்ப் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. ரஷியாவின் கருத்துகள் பிரதிபலித்து வருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பல தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.
உக்ரைனுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி கேய்த் கெலோக், ஸெலென்ஸ்கி மற்றும் உக்ரைன் ராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்து அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்தும், அமெரிக்க, ரஷியா பேச்சுவாா்த்தை முடிவுகள் குறித்தும் எடுத்துரைக்க இருக்கிறாா்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த வரையில் உக்ரைனுக்கு முழுமையாக ஆதரவு அளித்து, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினைத் தனிமைப்படுத்த முயற்சித்து வந்தாா். ஆனால், டிரம்ப் அதற்கு நோ்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளாா்.