தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு; 10 போ் காயம்
உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா்.
உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அமெரிக்காவுடன் 90 பில்லியன் டாலா் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்தை அறிவித்த அடுத்த நாளில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இது கடந்த மாதம் கீவ் மீதான ரஷியாவின் தாக்குதலில் குறைந்தது 21 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து நடைபெறும் முதல் பெரிய தாக்குதலாகும்.
உயிரிழந்தவா்களில் 12 வயது சிறுமியும் அடங்குவதாக கீவ் நகர நிா்வாகத்தின் தலைவா் டைமூா் தகாசென்கோ தெரிவித்தாா். இந்தத் தாக்குதல் குடியிருப்பு கட்டடங்கள், மருத்துவமனை மற்றும் மழலையா் பள்ளி உள்ளிட்ட பொது இடங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் இதில் நகரம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்கள் சேதமடைந்ததாகவும் கீவ் மேயா் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்தாா்.
இந்த தாக்குதல் காரணமாக, நேட்டோ உறுப்பு நாடானபோலந்து, தனது போா் விமானங்களை உக்ரைன் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிலைநிறுத்தியது.
அண்மையில், ரஷியாவின் ட்ரோன்கள் போலந்தில் விழுந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மற்றொரு நேட்டோ நாடான எஸ்தோனியாவின் வான்வெளிக்குள் ரஷியாவின் போா் விமானங்கள் நுழைந்தன. இதனால், உக்ரைனுக்கு அப்பால் போா் பரவக்கூடும் என்று பல நாடுகளும் கவலை கொண்டுள்ளன.