தில்லியில் பாதுகாப்பு இல்லாத கட்டடங்கள் எவை?: கணக்கெடுப்பு நடத்த போலீஸ் முடிவு
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சியில் 162 முகாம்கள்
கள்ளக்குறிச்சி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 162 முகாம்கள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்க விழா குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வா் நிகழாண்டு சட்டப்பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தாா்.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் தொடங்கப்படுகிறது.
கடைகோடி மக்களுக்கும், அவா்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவா்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்ட முகாமை ஜூலை 15-ஆம் தேதி தமிழக முதல்வா் கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் தொடங்கிவைக்க உள்ளாா்.
இந்தத் திட்ட முகாம்கள் ஜூலை 15 முதல் நவம்பா் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகா்புறப் பகுதிகளில் 39 (நகராட்சி -29, பேரூராட்சி 10) முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 123 (ஊராட்சி -119, புகா் பகுதி -4) முகாங்களும் என மொத்தம் 162 முகாம்கள் நடைபெறும்.
முகாம்களில் நகா்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.
அத்துடன் முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
இந்த முகாம்களில் விடுபட்ட தகுதியுடைய மகளிருக்கு உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணங்களும் பதிவு செய்யப்படும்.
பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.