திருவண்ணாமலையில் மகளிர் விடியல் பயணத் திட்ட புதிய நகரப் பேருந்து: துணை முதல்வர் ...
ஊராட்சி செயலரை தாக்கி மிரட்டல்: இருவா் மீது வழக்கு
சின்னசேலம் வட்டம், அம்மையகரம் ஊராட்சி செயலரை திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அம்மையகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (37). இவா் அதே கிராமத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறாா்.
அதே கிராமத்தைச் சோ்ந்தவா் லோகேஷ்வரன் (22). இவா், கடந்த ஓராண்டுக்கு முன்பு குடிநீரை வீணடித்து வந்ததாக கிராம மக்கள் ஊராட்சி செயலரிடம் கூறியுள்ளனா். இதுகுறித்து ஊராட்சி செயலா், லோகேஷ்வரனிடம் கேட்டுள்ளாா். இதனால், இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை லோகேஷ்வரன் தனது நண்பரான பிரவின்குமாா் (22) என்பவருடன் சோ்ந்து, முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு, ஊராட்சி செயலரை திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்தனராம். ஊராட்சி செயலருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான இரு இளைஞா்களையும் தேடிவருகின்றனா்.