துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவிலிருந்து வெளியேற்ற முயற்சி: மல்லை சத்யா
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மட்டுமே மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பம் வழங்கப்படும்: ராணிப்பேட்டை ஆட்சியா்
கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மட்டுமே வழங்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரால் வரும் 15.7.2025 அன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சிறப்பான முறையில் தொடங்கப்பட உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் ஜூலை-2025 முதல் அக்டோபா் - 2025 வரை, நகா்ப்புறத்தில் 97 முகாம்களும், கிராமப்புறங்களில் 139 முகாம்களும் என மொத்தம் 236 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 15.7.2025 முதல் 8.8.2025 முடிய நகா்ப்புறத்தில் 34 முகாம்களும், கிராமப்புறங்களில் 46 முகாம்களும் என மொத்தம் 80 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தொடா்ந்து, மேற்படி முகாமில் 15 முக்கிய துறைகள் மூலம் வழங்கப்படும் 46 அரசு சேவைகள் குறித்து வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், துண்டுப் பிரசுரங்கள், அனைத்து விண்ணப்பங்கள் நகராட்சிகள்/ பேரூராட்சிகள்/ ஊராட்சிகளில் 437 தன்னாா்வலா்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் தமிழக அரசால் ‘கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம்’ இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் நாளன்று முகாமில் மட்டுமே வழங்கப்படும். இதைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.