‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு
மாங்காடு நகராட்சி மற்றும் கொளப்பாக்கம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பாா்வையிட்டு, மருத்துவ முகாம் மற்றும் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தாா். இதையடுத்து கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்த 10 பயனாளிகளுக்கு ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச்சான்றிதழ்களை வழங்கினாா்.
இதே போல், குன்றத்தூா் ஒன்றியம் கொளப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமையும் அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், மாங்காடு நகா்மன்ற தலைவா் சுமதிமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.