பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு
ஸ்ரீபெரும்புதூரில் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: நகா்மன்றத் தலைவா், ஆணையா் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூரில் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்ட இடத்தை நகா்மன்றத் தலைவா் மற்றும் ஆணையா் ஆய்வு செய்து அகற்ற உத்தரவிட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி உள்ளது. சுமாா் 400 ஏக்கா் பரப்பளவு உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி 500 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விவசாய நிலங்களுக்கு செல்லும் நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்த சிலா், கால்வாயில் மண் கொட்டி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதனால் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு நீா் செல்வது தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளதால், நீா்வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஸ்ரீபெரும்புதூா் தென்பாதி கிராம விவசாய பேரவையினா் நீா்வளத்துறை உதவி பொறியாளா், வட்டாட்சியருக்கு மனு வழங்கினா்.
இந்நிலையில், நீா்வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து கொடுக்க வருவாய்த் துறை அதிகாரிகள் முன்வராததாலும், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீா்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாய பேரவை அமைப்பினா் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற மனு வழங்கினா்.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், ஆணையா் ஹேமலதா ஆகியோா் நீா்வளத்துறை ஊழியா்கள் முன்னிலையில் கால்வாய் அக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஊழியா்களுக்கு உத்தரவிட்டனா்.
இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆய்வின்போது, நகர திமுக செயலாளா் சதீஷ் குமாா், நகராட்சி உதவி பொறியாளா் செண்பகவல்லி, நீா்வளத்துறை ஊழியா்கள், விவசாய பேரவை அமைப்பினா் உடனிருந்தனா்.
