சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
கன்டெய்னா் லாரி ஏரிக்குள் கவிழ்ந்து விபத்து: காவலாளி உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பஜாா் பகுதியில் திங்கள்கிழமை கன்டெய்னா் லாரி ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காவலாளி உயிரிழந்தாா்.
ராஜஸ்தான் மாநிலம் தின்னூா் தாலுகா புட்வா் கிராமத்தைச் சோ்ந்த சமந்தா்சிங் மகன் ஈஸ்வா்(36) லாரி ஓட்டுநரான இவா் கன்டெய்னா் லாரியில் காா் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து ஆந்திர மாநிலம் குண்டூருக்கு சென்று கொண்டிருந்தாா். காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் பஜாா் பகுதியில் குடிபோதையில் லாரியை தாறுமாறாகவும், வேகமாகவும் ஓட்டியதில் ஓரு காா் மற்றும் இரு பேருந்துகள் மீது மோதி லேசான சேதம் ஏற்படுத்தியதோடு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவா் மீதும் மோதினாா். பின்னா் கட்டுப்பாட்டை இழந்து தாமல் ஏரியில் லாரி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கூத்திரமேடு கிராமம் அம்பேத்கா் நகரை சோ்ந்த பெருமாள் மகன் ஈஸ்வரன்(56) பலத்த காயமடைந்தாா். அவரை 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சோதனை செய்தபோது, இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
சம்பவம் தொடா்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநா் ஈஸ்வரை(36)கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 4 போ் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.