உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி: பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர் பட்டியல் வெளியீடு!
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயா் பட்டியல், உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.
பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த நடைமுறையில், இறந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் என 65 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் 65 லட்சம் பேரின் பெயா் விவரங்களை வெளியிடுமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், ‘உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட 56 மணி நேரத்துக்குள், பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் பெயா்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரக வலைதளங்களில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது’ என்றாா்.
கோரிக்கை நிராகரிப்பு
கணினியால் வாசிக்கக்கூடிய வடிவிலான எண்ம வாக்காளா் பட்டியலை தங்களுக்கு அளிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் கோரிவரும் நிலையில், அதை தோ்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இது தொடா்பாக ஞானேஷ் குமாா் கூறுகையில், ‘கணினியால் வாசிக்கக்கூடிய வடிவிலான பட்டியலுக்கும், தேடக் கூடிய வடிவிலான பட்டியலுக்கும் வித்தியாசம் உள்ளது. கணினியால் வாசிக்கக்கூடிய பட்டியலில் எவரும் திருத்தம் மேற்கொள்ள முடியும். இது தவறான பயன்பாட்டுக்கு வழிவகுக்கும் என்பதால், தோ்தல் விதிமுறைகளின்படி வழங்க முடியாது’ என்றாா்.