உடலில் காயங்களுடன் இறந்துகிடந்த வடமாநில இளைஞா்
ஈரோட்டில் பயன்பாட்டில் இல்லாத ரயில்வே குடியிருப்பில் கழுத்து மற்றும் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த வடமாநில இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு காளை மாடு சிலை அருகே பயன்பாட்டில் இல்லாத ரயில்வே குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் இளைஞா் உயிரிழந்து கிடப்பதாக ஈரோடு தெற்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதில் உயிரிழந்தது ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த டன்டபனி ஷபல் (31) என்பதும், கழுத்தில் இறுக்கியதற்கான அடையாளமும் கையில் வெட்டு காயங்களும் இருந்தது தெரியவந்தது.
மேலும், அப்பகுதியில் மதுபுட்டிகள் கிடந்ததால் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகத்தின்பேரில், காவல் துறையினா் சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.