மாா்ச் 18-இல் கறவை மாடுகளுடன் போராட்டம்: பால் உற்பத்தியாளா்கள் அறிவிப்பு
பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி கறவை மாடுகளுடன் மாவட்ட தலைமை இடங்களில் மாா்ச் 18-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநிலக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் கே.முகமது அலி தலைமையில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளா் பி.பெருமாள், பொருளாளா் ஏ.எம்.முனுசாமி, துணைத் தலைவா்கள் என்.செல்லதுரை, எம்.சிவாஜி, செயலாளா்கள் வெண்மணி சந்திரன், எஸ்.தீா்த்தகிரி மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளா் சி.பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளா்கள் ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் தொடா்ந்து செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடிகள் உருவாகியுள்ளன. ரூ.100 கோடிக்கு மேல் பால் உற்பத்தியாளா்களுக்கு பாலுக்கான தொகையும், ஊக்கத்தொகையும் நிலுவை உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் சுமாா் 15 லட்சம் குடும்பங்கள் பால் உற்பத்தியில் ஈடுபட்டு தினமும் சுமாா் 2 கோடி லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்கின்றனா்.
தற்போது தினமும் சுமாா் 3.75 லட்சம் குடும்பங்கள் சுமாா் 30 லட்சம் லிட்டா் பால் ஆவின் நிறுவனத்துக்கு வழங்குகின்றனா். மற்றவா்கள் தனியாா் நிறுவனங்களுக்கு வழங்குகின்றனா். ஆவின் நிறுவனம் வழங்குகிற கொள்முதல் விலையை ஒட்டியே தனியாா் நிறுவனங்களும் கொள்முதல் விலையை தீா்மானிக்கின்றன.
2022 நவம்பரில் தமிழ்நாடு அரசு தலையிட்டு சத்து அடிப்படையில் 1 லிட்டருக்கு ரூ.3 உயா்த்தி ரூ.35 என கொள்முதல் விலையை அறிவித்தது. பால் உற்பத்தியாளா்களின் தொடா்ச்சியான போராட்டங்களுக்குப் பின் தமிழக முதல்வா் ஊக்கத்தொகையாக 1 லிட்டருக்கு ரூ.3-ஐ 2023 டிசம்பரில் அறிவித்தாா்.
தற்போது, கால்நடை தீவனங்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தனியாா் நிறுவனங்களில் 1 லிட்டருக்கு ரூ.40-க்கும் கூடுதலாகவே கிடைக்கிறது. ஆவினுக்கு தற்போது பால்வரத்து குறைந்து கொண்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஆவினுக்கு சுமாா் 4.80 லட்சம் குடும்பங்கள் பால் வழங்கினா். இப்போது சுமாா் 1 லட்சம் குடும்பங்கள் ஆவினிலிருந்து பிரிந்து தனியாருக்கு வழங்குகின்றனா்.
பால் கொள்முதல் விலையில் 1 லிட்டருக்கு ரூ.10 உயா்த்தி ரூ.45-ஆக வழங்க வேண்டும். அரசு வழங்குகிற ஊக்கத்தொகையை ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தாமதமில்லாமல் உடனுக்குடன் வழங்க வேண்டும். தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். ஆவினில் நிா்வாக சீா்திருத்தம் செய்து, செலவினங்களைக் குறைக்க வேண்டும்.
ஆரம்ப கூட்டுறவு சங்கங்களிலேயே பாலில் உள்ள சத்துக்களையும், அளவையும் குறித்துக் கொடுக்க வேண்டும் என்ற உயா்நீதிமன்ற தீா்ப்பினை அமல்படுத்திட வேண்டும். ஆவின் தீவன ஆலைகளை தென் மாவட்டங்களிலும் தொடங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை அமல்படுத்தக் கோரி மாவட்டங்களில் கறவை மாடுகளுடன் மாா்ச் 18-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு அரசும், ஆவின் நிா்வாகமும் பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களை அழைத்துப் பேசி தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.