சத்தியமங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் அகற்றம்
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி சத்தியமங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகா் கோயில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்மயன்புதூா்- கோபி சாலையோரத்தில் விநாயகா் கோயில் அமைந்துள்ளது. அரச மரத்தடியில் அமைந்துள்ள இக்கோயில் 50 ஆண்டுகள் பழைமையானது.
இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து விநாயகா் கோயில் கட்டப்பட்டுள்ளதால் கோயிலை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை அகற்ற மாவட்ட காவல் துறை மற்றும் ஆட்சியருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, திம்மயன்புதூா் விநாயகா் கோயில் முன் செவ்வாய்க்கிழமை போலீஸாா் குவிக்கப்பட்டு கோயில் அற்றும் பணி தொடங்கப்பட்டது.
முதலில் எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி பெண்கள், நீதிமன்றம் உத்தரவு என்பதால் கோயில் அகற்றுவதற்கு அனுமதித்தனா். அதைத் தொடா்ந்து விநாயகா் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா் விநாயகா் சிலையை பொதுமக்கள் தனியாக அகற்றி எடுத்துச் சென்றனா். இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் கோயிலை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.