இட்லி தயாரிப்பில் நெகிழித் தாள் பயன்பாடு: உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
ஈரோட்டில் இட்லி தயாரிப்பின்போது நெகிழித் தாள் பயன்படுத்தப்படுகிா என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் உணவகங்களில் சோதனை நடத்தினா்.
இட்லி தயாரிப்பின்போது துணிக்கு பதில் நெகிழித் தாள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து, தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளா், உணவுப் பாதுகாப்பு ஆணையா் ஆகியோா் தமிழகத்தில் இட்லி தயாரித்து வழங்கும் இடங்கள், உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தாா்.
இதன்பேரில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வழிகாட்டுதலோடு ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தங்க விக்னேஷ் தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமாா் கொண்ட குழுவினா் உணவகங்கள், இட்லி தயாரித்து வழங்கும் இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள், கருங்கல்பாளையம் இட்லி தயாரித்து வழங்கும் உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இட்லி தயாரிப்பின்போது நெகிழி பயன்பாடு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் இந்த ஆய்வின்போது அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள், செய்தித்தாள்களில் பலகாராம் விநியோகம் செய்ததற்காக அக்கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.9 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தங்க விக்னேஷ் கூறுகையில், ஆட்சியா் உத்தரவின்பேரில், ஈரோட்டில் இட்லி தயாரிக்கும் கடை உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 9444042322 என்ற தொலைபேசி எண்ணில் உணவு தொடா்பான புகாா் அளிக்கலாம் எனவும் தெரிவித்தாா்.