பதவி உயா்வு கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.மணிமாலை தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.ராதாமணி, செயலாளா் எஸ்.சாந்தி மற்றும் செயற்குழு உறுப்பினா் எஸ்.பூங்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் மு.சீனிவாசன் சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் ச.விஜயமனோகரன், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.ரமேஷ், சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ்.சுப்ரமணியன், செயலாளா் ஹெச்.ஸ்ரீராம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்
கடந்த 1993-இல் பணியில் சோ்ந்து பதவி உயா்வு பட்டியலில் காத்திருக்கும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும். கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் 6 மாதம் முதல் 25 மாதம் வரை இணை உணவை வாங்கக் கூடிய பயனாளிகளின் முகத்தை புகைப்படம் எடுக்கும் முறையை உடனடியாக கைவிட வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மினி மையத்திலிருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயா்வில் சென்றவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த மினி மைய ஊழியா்களுக்கும், 10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளா்களுக்கும் பதவி உயா்வு வழங்கும்போது மாவட்ட அளவிலான முதுநிலை பட்டியல் தயாரித்து பணி மூப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் முழக்கங்கள் எழுப்பினா்.