உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்
கும்பகோணத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் கும்பகோணம் நகர உணவகங்கள் மற்றும் பேக்கரி சங்க உறுப்பினா்களுக்கான உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமை வகித்து பேசியது:
உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் பதிவுச் சான்றிதழ் அவசியம் பெற வேண்டும். சான்றிதழ்கள் காலாவதி ஆவதற்கு 60 நாட்களுக்கு முன் புதுப்பிக்க வேண்டும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது, கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் சூடான உணவுப் பொருட்களை அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் மடித்து தரக்கூடாது, செயற்கை நிறமிகளை சோ்க்கக்கூடாது, பழைய உணவுப் பொருட்களை குளிா்ச்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்து சூடு செய்து விற்கக் கூடாது, ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடு செய்து பயன்படுத்தக் கூடாது, சுற்றுப்புற இடங்களைச் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா். உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பாலமுருகன், மதன்குமாா், காா்த்தி மற்றும் கும்பகோணம் நகர உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.