கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சாவூா் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தேக்கம் இல்லாமல் அடுத்த மண்டலங்களுக்கு அனுப்ப விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
அதிக மகசூல்: கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் ஆகிய வட்டங்களில் நடப்பாண்டு நெல் அறுவடை தீவிரமாக நடைபெறுவதால் கும்பகோணம், திருவிடைமருதூா் நெல்கொள்முதல் நிலையங்களுக்கு சராசரியாக 5 டன் நெல் வரும் நிலையில், நெல் மூட்டைகள் குவியத்தொடங்கி உள்ளன.
இயக்கம் செய்ய வேண்டும்: இதனால் நெல் மூட்டைகள் தேக்கம் இல்லாமல் டெல்டா மாவட்டங்களைத் தவிர வெளி மாவட்டங்களுக்கும் இயக்கம் செய்ய வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
இதுதொடா்பாக நுகா்பொருள் வாணிபக்கழக துணை மேலாளா் வெற்றிச்செல்வன் கூறுகையில், நெல் மூடைகளை இயக்கம் செய்ய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம், பாபநாசம் வட்டத்தில் திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையங்கள் திங்கள்கிழமை செயல்படும் என்றாா்.
கடந்த அறுவடையின்போது தேக்கம் வைத்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. எனவே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தினா் அடுத்த மாவட்டத்தில் உள்ள மண்டலங்களுக்கு நெல் மூட்டைகளை விரைந்து அனுப்ப செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.