உதகை, கொடைக்கானலில் இ -பாஸ் கட்டுப்பாடுகளை தளா்த்தக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்
உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டுப்பாடு விதித்து உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மறுஆய்வு செய்து கட்டுப்பாடுகளைத் தளா்த்தக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்கவுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மலை வாசஸ்தலங்களான உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் கூட்டாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு உதகை மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து நீதிபதிகள் என். சதீஷ்குமாா், டி.பரத சக்ரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.
அதன்படி, உதகைக்கு வார நாள்களில் தினமும் 6,000 வாகனங்களுக்கும், வார இறுதி நாள்களில் 8,000 வாகனங்களுக்கும் மட்டுமே ‘இ-பாஸ்’ வழங்க வேண்டும் என்றும், அதேபோல, கொடைக்கானலில் வார நாள்களில் தினமும் 4,000 வாகனங்களுக்கும், வார இறுதி நாள்களில் 6,000 வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி வேண்டும் என்றும், ‘இ-பாஸ்’ இல்லாமல் எந்த வாகனங்களையும் அனுமதிக்கக்கூடாது எனவும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
கொடைக்கானல், உதகைக்கு விதிக்கப்பட்ட வாகன கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து உதகையில் உள்ளூா் வணிகா்கள் கடந்த புதன்கிழமை கடை அடைப்புப் போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து உயா்நீதிமன்றத்தின் வாகன கட்டுப்பாடு தொடா்பான உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம்? என்பதை ஐஐடி, ஐஐஎம் நிபுணா்களின் ஆய்வுக்குப் பிறகு முடிவு எடுத்துக்கொள்ளலாம்.
கோடை விடுமுறைக்காக விதிக்கப்பட்டுள்ள இந்த வாகன கட்டுப்பாடுகளால் உள்ளூா் வணிகா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்ரவா்த்தி ஆகியோா் முன்பாக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் முறையீடு செய்தாா். அதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனா்.