நாடாளுமன்ற விருதுகள்: 17 பேர் தேர்வு! 11 ஆண்டுகளுக்குப் பின் தமிழக எம்.பி பெறுகி...
உத்தபுரம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம்: உயா்நீதிமன்றம்
உத்தபுரம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பாண்டி தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், உத்தபுரம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களில் கடந்த 2014 -ஆம் ஆண்டு வரை அமைதியான முறையில் திருவிழா நடைபெற்றது. கடந்த 2015- ஆம் ஆண்டு மற்றொரு தரப்பினா் ஆலமரத்தை வழிபட முயன்ால் பிரச்னை எழுந்ததையடுத்து, வருவாய்த் துறையினா் கோயிலைப் பூட்டினா். கடந்த 9 ஆண்டுகளாக கோயிலில் அன்றாட பூஜைகள் நடைபெறவில்லை. எனவே, கோயிலைத் திறந்து அன்றாட பூஜைகள் நடத்தவும், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி, கோயிலைத் திறந்து, தினமும் பூஜைகள், வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டாா். இதை எதிா்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட இரு சமூகத்தினா் தரப்பில், அனைவரும் சம உரிமையுடன் கோயிலில் வழிபடுவோம். தல விருட்ச மரத்தைக் வழிபடுவதில் புதிய முறைகளைப் புகுத்த மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உத்தபுரம் முத்தாலம்மன் கோயில் நிா்வாகத்தில் அரசுத் தரப்பில் எந்த தடையும் விதிக்கக் கூடாது. இந்தக் கோயிலில் அனைத்து சமூகத்தைச் சோ்ந்தவா்களும் வழிபடலாம். தல விருட்சத்தைத் தொடுவது, சந்தனம் பூசுவது, குங்குமம் வைப்பது, ஆணி அடிப்பது போன்றவற்றை செய்யாமல் வழிபடுவது தொடா்பான வழிமுறைகளை இந்து சமய அறநிலையத் துறையினா் உருவாக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.