உயா்நீதிமன்ற உத்தரவு எதிரொலி குடியாத்தம் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, குடியாத்தம் நகரில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தனிநபா் ஒருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோட்டாட்சியா், நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, பிரதான தெருக்களில் உள்ள வீடுகள், கடைகளின் உரிமையாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் 15 நாள்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, சிலா் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனா். கெடு முடிந்த நிலையில், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, வட்டாட்சியா் பி.மொ்லின்ஜோதிகா, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் ஆகியோா் மேற்பாா்வையில் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. அப்போது நகர காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ள சாலை, அண்ணா தெரு, ஜி.பி.எம்.தெரு, குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்தப் பணியில் சுமாா் 100 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.
அரசு மருத்துவமனை தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, நகராட்சிப் பணியாளா்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் சமரசம் செய்து அனுப்பினா்.