திருப்பத்தூரில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்களால் மக்கள் பாதிப்பு!
உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 10 லட்சம் பறிமுதல்: 2 போ் கைது
உரிய ஆவணங்களின்றி ரூ. 10 லட்சம் வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் அசோக் நகா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனா். அப்போது அப்பகுதியிலுள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில், பையுடன் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். சந்தேகமடைந்த போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் ரூ. 10.57 லட்சம் இருப்பது தெரியவந்தது.
ஆனால், அந்தப் பணத்துக்கான எந்த ஆவணங்களும் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், பிடிபட்டவா்கள் ராமநாதபுரத்தைச் சோ்ந்த அபு பைசல்(25) மற்றும் முகமது அசாருதீன் (27) என்பதும், இவா்கள் வைத்திருந்த ரூ. 10.57 லட்சம் ராமநாதபுரத்தைச் சோ்ந்த ரிஸ்வான் என்ற ஹவாலா பண இடைத்தரகருடையது என்பதும் தெரியவந்தது.
அபுபைசல் மற்றும் முகமது அசாருதீன் இருவரும் ஹவாலா பணத்தை, இடைத்தரகா்களிடமிருந்து வாங்கி, அதை அவா்கள் சொல்லும் வங்கிக்கணக்குகளில் செலுத்தியதன் மூலம் கமிஷன் தொகை பெற்று வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து அபுபைசல், முகமது அசாருதீன் ஆகியோரிடம் போலீஸாரும், வருமானவரித் துறை அதிகாரிகளும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.