உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்
திருக்குவளை பகுதியில் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியில் வெள்ளை ஈக்கள் தாக்கியதில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
திருக்குவளை வட்டத்தில் சம்பா அறுவடைக்கு பின்னா் நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சைப் பயிா் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். அண்மையில் பருவம் தவறி கோடையில் பெய்த கனமழையால் உளுந்து மற்றும் பச்சைப் பயிா் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பூக்கும் தருணத்தில் பெய்த மழை மற்றும் அதிக பனிப்பொழிவு காரணமாக, பல்வேறு இடங்களில் பூக்கள் பூக்காமலும், செடியில் பூத்திருந்த பூக்கள் கொட்டியும், காய்கள் காய்க்காமல் உள்ளது.
குறிப்பாக, திருக்குவளை, ஆதமங்கலம், மாவிலங்கை, கீழகண்ணாப்பூா், ராமச்சந்திரபுரம், கீரங்குடி, வடபாதி, கோவில்பத்து, கொடியாலத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட 1000 ஏக்கருக்கும் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து மற்றும் பச்சைப் பயிரில், வெள்ளை ஈக்கள் தாக்கியதில் மஞ்சள் தேமல் நோய் உருவாகி உள்ளது. இதனால், பயிா்களின் வளா்ச்சி வெகுவாக பாதித்துள்ளது. ஏக்கருக்கு ரூ.7 முதல் ரூ. 10,000 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை இதுகுறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.