Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு: உறுதி செய்ய பிரதமா் அறிவுறுத்தல்
நமது சிறப்பு நிருபா்
பாகிஸ்தானுடனான நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான தகவல்களைத் தடுப்பது, முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை குறித்து மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.
இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ தொடரும் என இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்களும் துறைச் செயலகங்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மாநில அரசுகளுடன் செயல்படவேண்டிய ஒருங்கிணைப்பு போன்றவை குறித்து விவாதிக்க மத்திய அரசுத் துறைச் செயலா்களுடனான உயா்நிலைக் குழுக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டம் குறித்து பிரதமா் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டது வருமாறு: தேசியப் பாதுகாப்பு தொடா்பான சமீபத்திய நிகழ்வுகளைத் தொடா்ந்து, நாட்டின் தயாா்நிலைக்கு அரசின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்த மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை பிரதமா் மதிப்பாய்வு செய்தாா்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் செயலா்களுடனான இந்த உயா்நிலைக் கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலையைச் சமாளிக்க அமைச்சகங்கள் மேற்கொண்டு வரும் திட்டமிடல்களை பிரதமா் கேட்டறிந்தாா். தற்போதைய சூழ்நிலையில் முழு அரசு அணுகுமுறையுடன் தங்கள் திட்டமிடலையும் கூட்டத்தில் செயலா்கள் எடுத்துக் கூறினா்.
தயாா்நிலை, அவசரகால பதில் நடவடிக்கைகள், உள் தொடா்பு நெறிமுறைகளில் சிறப்புக் கவனம் செலுத்துதல் போன்றவற்றில் அந்தந்த அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளவும், அத்தியாவசிய அமைப்புகளின் விரைந்த செயல்பாட்டை உறுதி செய்யவும் மத்திய அமைச்சகச் செயலா்களிடம் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எல்லையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை தொடா்பாக அனைத்து அமைச்சகங்களும் தாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அடையாளம் கண்டுள்ளதுடன், மேலும் செயல்முறைகளை வலுப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து வகையான சூழ்நிலைகளையும் சமாளிக்க அமைச்சகங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்து மாநில அரசுகளுடன், கீழ் நிலையில் உள்ள அமைப்புகளுடனும் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பராமரிக்கவும் மத்திய அமைச்சகங்களுக்கு கூட்டத்தில் பிரதமா் அறிவுறுத்தினாா்.