ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை: திரௌபதி முா்மு
‘ஊழல் செய்பவா்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தாமதமாகவோ அல்லது சிறிய தண்டனை வழங்கினாலோ இந்தக் குற்றத்தை செய்ய பிறரை ஊக்குவிப்பதுபோல் ஆகிவிடும்’ என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (சிவிசி) சாா்பில் நடத்தப்பட்ட ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:
அரசுப் பணிகள் மற்றும் நலத் திட்டங்கள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே நிா்வாகத்தின் சக்திக்கான பிறப்பிடமாகும். பொருளாதார முன்னேற்றத்தின் தடைக்கல்லாக ஊழல் இருப்பதோடு சமூகத்தின் மீதான நம்பிக்கையை குறைத்துவிடுகிறது. மக்களிடையே உள்ள சகோதரத்துவத்தை பாதிப்பதோடு, தேச ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, ஊழல் செய்பவா்கள் மீது உரிய நேரத்தில் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமாகவோ அல்லது சிறிய தண்டனை வழங்கினாலோ இந்தக் குற்றத்தை செய்ய பிறரை ஊக்குவிப்பதுபோல் ஆகிவிடும். அதேசமயத்தில் ஒருவா் மீது எடுக்கப்படும் நடவடிக்கை சமூகத்தில் நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும்.
ஊழலை தடுக்க வங்கிக் கணக்கில் நேரடி பணப் பரிவா்த்தனை (டிபிடி) முறை, இணைய வழியில் ஏலம், பண முறைகேடு தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) உள்ளிட்ட முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. விரைவில் நாட்டிலிருந்து ஊழல் வேரோடு அழிக்கப்படும் என நம்புகிறேன் என்றாா்.
ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை சிவிசி கொண்டாடி வருகிறது. நிகழாண்டு அக்.28 முதல் நவ.3 வரை ‘தேச வளமைக்கான கலாசார ஒருங்கிணைப்பு’ என்ற கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.