டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.85.82-ஆக முடிவு!
எடை குறைவாக அரிசி விநியோகம்: ரேஷன் விற்பனையாளா் பணியிடை நீக்கம்
காஞ்சிபுரம் எம்.வி.எம்.பி. நகா் நியாயவிலைக் கடையில் எடை குறைவாக அரிசி விநியோகம் செய்த கடையின் விற்பனையாளா் அருள்மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட டெம்பிள் சிட்டி, எம்.வி.எம்.பி., நகா் பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் அப்பகுதியை சோ்ந்த சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் பொருள்கள் வாங்கி வருகின்றனா்.
இந்த நிலையில், அந்த நியாயவிலைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை அரிசி உள்ளிட்ட பொருள்கள் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கும் சுமாா் 500 கிராம் எடை குறைவாக அரிசி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் விற்பனையாளரிடம் கேட்டதற்கு முறையாக பதில் கூறாததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடையின் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இது குறித்து மாமன்ற உறுப்பினா் காா்த்திக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து அங்கு வந்த காா்த்திக் விற்பனையாளரிடம் கேட்டதற்கு முறையான பதில் தராததால், மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
அங்கு வந்த காஞ்சிபுரம் வட்ட வழங்கல் அலுவலா் லட்சுமி விசாரணை நடத்தினாா். இதில் எடை குறைவாக அரிசி வழங்கியதும், பொதுமக்களுக்கு உரிய பதில் தராமல் இருந்ததும் தெரிய வந்தது. வட்ட வழங்கல் அலுவலா் லட்சுமி ஆய்வு செய்து கொண்டிருந்த போதே விற்பனையாளா் அருள்மணி திடீரென மயங்கி விழுந்தாா்.
இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு வட்ட வழங்கல் அலுவலா் லட்சுமி புகாா் தெரிவித்ததன் பேரில், கடையின் விற்பனையாளா் அருள்நிதியை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் உத்தரவிட்டாா். மேலும், பொருள்களை எடையிடும் பணியில் ஈடுபட்டு வந்த அன்பு மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தாா்.