எண்ணேக்கொல் அணைக்கட்டு வழங்கு கால்வாய்: ஆட்சியா் ஆய்வு
எண்ணேக்கொல் அணைக்கட்டில் இருந்து ரூ. 233.34 கோடியில் வலது, இடதுபுற புதிய வழங்கு கால்வாய்கள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
புதிய வழங்கு கால்வாய் பணிகள் குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு திருப்பிவிட பிரதான கால்வாய்கள், கிளை கால்வாய்கள் அமைக்கும் பணிகள் ரூ.233.34 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த எண்ணேக்கொல் அணைக்கட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணைக்கு மேல் 16 கி.மீ. தொலைவில் உள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எண்ணேக்கொல் அணைக்கட்டில் இருந்து வலதுபுறத்தில் 50.65 கி.மீ. தொலைவிற்கு பிரதான கால்வாயும், 5.51 கி.மீ. கிளை கால்வாயும் வெட்டப்படுகிறது. அதேபோல இடதுபுறத்தில் 22.675 கி.மீ. தொலைவிற்கு பிரதான கால்வாயும், 2.40 கி.மீ. தொலைவுக்கு கிளைக்கால்வாய் வெட்டும் பணிகளும், தொட்டி பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
இத் திட்டத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், வேப்பனப்பள்ளி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் 26 ஏரிகளும், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதிகளில் 7 ஏரிகள், ஒரு அணைக்கும் தண்ணீா் வழங்கப்படும். மேலும், இத் திட்டத்தால் 23 கிராமங்களில் உள்ள 3,408 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். இக் கால்வாய்ப் பணிகளை விரைந்து முடித்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீா்வளத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின் போது, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் அறிவொளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.