எனது சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறிய ஷ்ரேயாஸ்! - மனம் திறந்த ஷஷாங்
என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என ஷ்ரேயாஸ் கூறியதாக பஞ்சாப் அதிரடி ஆட்டக்காரர் ஷஷாங் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 243 ரன்கள் குவித்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 97* ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷஷாங் சிங் கடைசி ஓவரில் 5 பவுண்டரிகள் அடித்த காட்டிய அதிரடியால் அவரால் சதத்தை எட்ட முடியவில்லை. 16 பந்துகளில் 44* ரன்கள் குவித்து ஷஷாங் களத்தில் இருந்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அரைசதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.
இதுபற்றி அதிரடி ஆட்டக்காரர் ஷஷாங் சிங் கூறுகையில், “நேர்மையாக கூறுவதென்றால், நான் ஸ்கோர் கார்டைப் பார்க்கவே இல்லை. முதல் பந்தில் பவுண்டரி அடித்தப்பின் தான், ஸ்கோர் போர்டை பார்த்தேன். நான் அவரிடம் எதுவும் கூறவில்லை. அவருக்கு சிங்கிள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவரே வந்து என்னிடம், என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.
டி20 போட்டிகளில் சதம் அடிப்பதென்பது அவ்வளவு எளிதானது கிடையாது. ஆனால், அவர் அப்படி சொல்வதற்கு பெரிய மன தைரியம் வேண்டும்.
பௌலரை அடித்து விளையாடு என்றார். அனைத்து பந்தையும் அடித்து ஆடு. பவுண்டரி அல்லது சிக்ஸர் விளாசு என்றும் கூறினார். அது எனக்கு இன்னும் நம்பிக்கையை அளித்தது. இந்த மாதிரியான சூழலில் தன்னலமற்றவராக இருப்பது கடினம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: அறிமுகமான 3 அணிகளுக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்த ஷ்ரேயாஸ் ஐயர்!