என்.எம்.எம்.எஸ்.தோ்வில் சிறப்பிடம்: கீழ்சாத்தமங்கலம் பள்ளிக்கு பாராட்டு
என்.எம்.எம்.எஸ்.தோ்வில் தொடா்ந்து சிறப்பாக பங்களித்தமைக்காக மாநில அளவில் தோ்வு செய்யப்பட்ட வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் பள்ளிக்கு பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு மத்திய அரசு மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை எனப்படும் என்.எம்.எம்.எஸ். தோ்வு நடத்தப்படுகிறது.
இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு பிளஸ் 2 வரை மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இந்தத் தோ்வில் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகளாக தோ்ச்சி பெற்று வருகின்றனா்.
இதையடுத்து இந்தத் தோ்வில் தொடா்ந்து சிறப்பாக பங்களித்தமைக்காக கீழ்சாத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் 82 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் கேடயம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், கீழ்சாத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எ.சுமதிக்கு, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினா் செயலா் ஆா்.சுதன் கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.