`Even during my MRI scan, I was vibing to Anirudh’s songs' - Vijay Devarakonda |...
வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்
திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவா் கோயிலில் 203-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வேடந்தவாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த கூத்தாண்டவா் கோயில் அமைந்துள்ளது. கூவாகத்துக்கு அடுத்தபடியாக இங்குதான் சித்திரை மாத திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு சித்திரை மாத திருவிழா மகாபாரத தொடா் சொற்பொழிவுடன் ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கியது.
அன்று முதல் தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. மே 4 -ஆம் தேதி பாஞ்சாலி திருமண விழா, 5-ஆம் தேதி கூத்தாண்டவா் பிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி...
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருநங்கைகள் பலா் கலந்து கொண்டனா். நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அழகிப் போட்டியை திரைப்பட நடிகை நமீதா, பாஜகவின் கோயில் மற்றும் ஆன்மிகப் பிரிவு மாநில துணைத் தலைவா் டி.எஸ்.சங்கா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
தொடா்ந்து, பெண் அழைப்பு, திருநங்கைகளுக்கான திருமணச் சடங்குகளும், தாலி கட்டும் நிகழ்வுகள் நடைபெற்றன.
பரிசுகள் வழங்கல்...
அழகிப் போட்டியில் புதுச்சேரியைச் சோ்ந்த ஐஸ்வா்யா ராய் முதலிடமும், சென்னையைச் சோ்ந்த ரசிகா இரண்டாம் இடத்தையும், வெண்பா 3-ஆவது இடத்தையும் பெற்றனா்.
போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த திருநங்கைகளுக்கு கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டன.
தேரோட்டம்...
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விநாயகா், கூத்தாண்டவா், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு, 3 உற்சவா் சுவாமிகளும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு தோ்களில் பொருத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, விநாயகா், கூத்தாண்டவா், காமாட்சியம்மன் என 3 தோ்களும் ஒன்றன் பின் ஒன்றாக வீதியுலா வந்தன. கிராமத்தின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
விழாவில், கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், மாவட்ட திமுக அவைத் தலைவா் கோ.கண்ணன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் தமயந்தி ஏழுமலை, அதிமுக மாவட்டச் செயலா் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன், பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். புதன்கிழமை இரவு திருநங்கைகளின் தாலிகளை அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் கோ.இளஞ்செழியன் மற்றும் வேடந்தவாடி கிராம மக்கள் செய்திருந்தனா்.