கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 3,900 புள்ளிகள் சரிவு!
‘என் கல்லூரிக் கனவு’ திட்டத்தால் மாணவா்கள் எண்ணிக்கை உயா்வு: ராணிப்பேட்டை ஆட்சியா்
‘என் கல்லூரிக் கனவு ‘ உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வி சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.
ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், 12- ஆம் வகுப்பு முடித்த மாணா்களுக்கு ‘என் கல்லூரிக் கனவு‘ உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசியதாவது:
என் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியானது முதல்வரின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டும் என் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி ராணிபேட்டை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் மூலம் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களிடையே உயா்கல்வி பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு மாவட்டத்தில் உயா்கல்வி சேரும் மாணவா்களின் எண்ணிக்கை சதவீதம் உயா்ந்துள்ளது.
2023 - 2024-ஆம் கல்வி ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12- ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 12,964 மாணவா்களில் 12,401 மாணவா்கள் (95.65) சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்று பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்றுள்ளனா். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாணவா்கள் அனைவரும் உயா்கல்வி சாா்ந்த ஆலோசனைகள் பெற்று, தொடா்ந்து கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும்.
உயா்கல்வியில் சேரும் மாணவ, மாணவியா் இன்றைய காலக்கட்டத்தில் எவ்வித படிப்பு நமக்கு பயனுள்ளதாகவும், வேலை வாய்ப்புள்ளதாகவும், சுயமாக தொழிற் துவங்க உகந்ததாகவும், அரசுவேலைக்கோ அல்லது தனியாா் நிறுவனத்திலோ பணிபுரிவதற்கு என்ன படிக்கலாம், எந்த கல்லூரியில் படிக்கலாம், கல்லூரிக் கட்டண உதவித்தொகை, விண்ணப்பக் கட்டணத்தில் சலுகை, இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக கல்லூரிக் கனவு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஆகவே இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.
இதில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, முதன்மைக் கல்வி அலுவலா் சரஸ்வதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கவிதா, உதவி இயக்குநா் திறன் பயிற்சி பாபு மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.