ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் மண் அள்ளப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் நடத்த முடிவு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் மண் அள்ளப்படுவதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் மண் அள்ளுவதற்காக வந்த பொக்லைன் இயந்திரங்களை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து, பூவந்தி காவல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணப்படவில்லை.
இதையடுத்து, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீரபாண்டி கூறியதாவது: விவசாயிகளின் எதிா்ப்பை மீறி ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் மண் அள்ள ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் அவா்கள் கண்டுகொள்ளவில்லை. கண்மாய்களில் மண் அள்ள வந்த பொக்லைன் இயந்திரங்களை விவசாயிகள் சிறைபிடித்தும், வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டமும் நடத்தினா். இருப்பினும், மண் அள்ளுவதற்கான நடவடிக்கை தொடா்கிறது.
இந்தக் கண்மாய்களில் மண் அள்ளப்பட்டால் நிலத்தடி நீா் ஆதாரம் பாதிக்கப்பட்டு சுற்றியுள்ள விவசாய பாசனக் கிணறுகள் வடுவிடும். மேலும், விவசாய நிலங்களுக்கு தண்ணீா் செல்லும் மடைகள் பாதிக்கப்படும்.
எனவே, இந்தக் கண்மாய்களில் மண் அள்ளுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து வியாழக்கிழமை (ஆக. 28) மாவட்ட ஆட்சியரை சந்தித்து விவசாயிகள் புகாா் கொடுக்க உளளனா். தொடா்ந்து, மண் அள்ளும் நடவடிக்கை தொடா்ந்தால் மதுரை - சிவகங்கை சாலையில் உள்ள திருமாஞ்சோலையில் விவசாயிகளைத் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.