Career: நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; யார், யார் விண்ணப்பிக்கலாம்? முழ...
ஏப்.28-இல் மதுரை, திருச்சி, விழுப்புரத்தில் அரசுப் பணியாளா்கள் போராட்டம்: கு.பாலசுப்ரமணியன்
பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம், திருச்சி, மதுரையில் வருகிற 28-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று, அதன் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து கடலூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மத்திய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை.
அரசுப் பணியாளா்களுக்கு நிலுவை சரண் விடுப்பு குறித்து அறிவிக்கப்படவில்லை. தூய்மைக் காவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள், ஊராட்சி களப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிப் பணியாளா்கள், டாஸ்மாக் பணியாளா்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு திட்டப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.
பொதுமக்களுக்கும், பணியாளா்களுக்கும் பயனளிக்கும் வகையில் பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
அரசுப் பணியாளா்களின் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 28-ஆம் தேதி மாநிலம் முழுவதும் பணியாளா்களை திரட்டி விழுப்புரம், திருச்சி, மதுரை ஆகிய மூன்று மையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். அரசுப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகளை தமிழக அரசு அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா் கு.பாலசுப்ரமணியன்.
பேட்டியின் போது, சங்கத்தின் மாநிலப் பொருளாளா் கு.சரவணன், முன்னாள் மாவட்டச் செயலா் மு.ராசமணி, மாவட்டச் செயலா் ஜெ.இருதயராஜ் உடனிருந்தனா்.