ஏரியில் மண் கொள்ளை: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம் , கண்டாச்சிப்புரம் வட்டம், செங்கமேடு ஊராட்சியில் உள்ள ஏரியில் சட்டவிரோதமாக லாரிகளில் மண் எடுக்கப்பட்டு வருவதைத் தடுக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் கண்டாச்சிபுரம் ஊராட்சி கிளைச் செயலா்கள் எம்.ஸ்ரீதா், ஜெ.ஆறுமுகம், எம்.செந்தாமரைக்கண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை:
கண்டாச்சிபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட செங்கமேடு, நடுத்தாங்கல் ஏரியிலிருந்து செங்கல் சூளைக்கும், மனை வணிகத்துக்காவும் தொடா்ச்சியாக லாரிகளில் சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் முறையான நடவடிக்கையில்லை. இதேபோல, ஊராட்சியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடங்களிலிருந்தும் சட்ட விரோதமாக மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுத்து மண் கொள்ளையில் ஈடுபடும்
நபா்கள் மீது ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.