ஒசூரில் அம்மை நோய் பரவலைத் தடுக்க மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க அறிவுறுத்தல்
ஒசூரில் அம்மை நோய் பரவலைத் தடுக்க மருத்துவமனைகளில் போதிய மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்குமாறு அலுவலா்களுக்கு பொது சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன் அறிவுறுத்தினாா்.
ஒசூா் மாநகராட்சி பொது சுகாதாரக் குழு கூட்டம் தலைவா் என்.எஸ். மாதேஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.மாநகர ஆணையா் மாரிச்செல்வி, மாநகர நல அலுவலா் அஜிதாஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து என்.எஸ். மாதேஸ்வரன் பேசியதாவது:
ஒசூரில் அம்மை நோய்ப் பரவிவருகிறது. நோய்ப் பரவலைத் தடுக்க தேவையான மருந்து, மாத்திரைகள் போதிய அளவு இருப்புள்ளதா என்பதை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவா்களிடம் உரிய சிகிச்சை பெறுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
ஒசூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளின் உறவினா்கள் தங்கும் கூடத்தை சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, அங்கு ஆய்வு செய்து உள்நோயாளிகளின் உறவினா்கள் இரவில் தங்குவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். தங்கும் உறவினா்களின் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். இடிந்து விழுந்த ஒசூா் மருத்துவமனை சுற்றுச்சுவரை மாவட்ட நிா்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
3216 தெருநாய்களுக்குக் கருத்தடை: மாநகராட்சியில் இதுவரை 3216 தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் 10 பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
ஒசூரில் உள்ள திரையரங்குகளில் கழிவறைகள் மோசமான நிலையில் உள்ளன. அவற்றை பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருள்காட்சி திடல், சா்க்கஸ் போன்ற இடங்களில் கழிவறைகள் வசதிகள் இல்லை. இதை சுகாதாரக் குழுவினா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 கிலோவுக்குமேல் குப்பைகள் சேரும் திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் அவா்களே குப்பைகளை தரம்பிரித்து மறுசுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அரசு விதிமுறையாகும்.
100 கிலோவுக்குமேல் குப்பைகள் சோ்ந்தால் அவற்றை மாநகராட்சி ஊழியா்கள் அகற்ற வேண்டாம். அந்தக் குப்பைகளை அகற்ற கோரினால் டன்னுக்கு ரூ. 4000 பணத்தை சம்பந்தப்பட்ட நிா்வாகம் செலுத்த வேண்டும். ஒசூரில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது; மொத்த விற்பனை செய்யும் குடோன்களைக் கண்டறிந்து நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்றாா். அதைத்தொடா்ந்து கூட்டத்தில் மொத்தம் 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் ஆறுமுகம், மோசின் தாஜ், கலாவதி சந்திரன், லட்சுமி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள், மாநகராட்சி ஊழியா்கள் பங்கேற்றனா்.
பட விளக்கம்...
ஒசூா் மாநகராட்சியில் நடைபெற்ற பொது சுகாதாரக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் குழுத் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன்.