ஒசூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி
ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திவரும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளிலும் தொழிலாளா்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா். தொழிற்சாலைகளில் ஷிப்டுகளில் பணிபுரிந்துவருவோா் இரவு பணிக்கு செல்லும்போது தெருநாய்கள் தொல்லையால் அச்சமடைந்துள்ளனா்.
தினசரி அரசு மருத்துவமனையில் தெருநாய் கடிக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாய்கள் கடித்ததில் பலா் உயிரிழந்துள்ளனா்.
இதையடுத்து ஒசூரில் மாநகராட்சி நிா்வாகம், கால்நடை பராமரிப்புத் துறை, ஒசூா் பன்முக கால்நடை மருத்துவமனை சாா்பில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியை துணை மேயா் ஆனந்தய்யா, கால்நடை பராமரித்துறை அதிகாரிகள், மருத்துவா்கள் ஆகியோா் பாா்வையிட்டனா். நகரின் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினா். தொடா்ந்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.