ஒசூரில் புதிய வெளிவட்டச் சாலை திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்: ஆட்சியா் ச.தினேஷ்குமாா்
ஒசூா்: ஒசூரில் புதிதாக வெளிவட்டச் சாலை அமைய உள்ளது; இந்தத் திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும் என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (எச்ஐஏ) மற்றும் தமிழ்நாடு காவல் துறை போக்குவரத்து பாதுகாவலா்கள் அமைப்பு இணைந்து 2025 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து பாதுகாவலா்கள் ஆண்டு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவா் ரமேஷ் வரவேற்றாா்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா் பேசியதாவது:
நான் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றபோது மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஐந்து இடங்களில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்வதற்கு சுமாா் ஒருமணி நேரத்திற்கு மேலானது. இந்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
இதனால், கடந்த ஆறு மாதங்களில் மூன்று மேம்பால கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. சிப்காட் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியை தீபாவளிக்கு முன்னரே முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். அதேபோல கோபசந்திரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளும் நிறைவடையும். இந்த மேம்பாலப் பணிகள் நிறைறவடைந்தால் மட்டுமே பத்தலபள்ளி பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்கப்படும்.
ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவா் ரமேஷ், ஒசூரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதை முறைப்படுத்துவது குறித்து பேசினாா். அவா் வைத்த கோரிக்கைகள், ஆலோசனைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும்.
புதிதாக வெளிவட்டச் சாலை அமைய உள்ளது. சூசூவாடியில் தொடங்கி பேரண்டபள்ளி வரை 11 கிராமங்கள் வழியாக இந்த சாலையை அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் நிறைவடைந்தால், போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து பத்தலபள்ளி மேம்பாலம் அமைய இருப்பதால், தொரப்பள்ளியில் இருந்து பாகலூா் வரை, அதாவது கா்நாடக மாநிலம் மாலூா் வரை உள்ள சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு அதாவது, கா்நாடக மாநிலம் ஹொச்கோடில் இருந்து தொரப்பள்ளி அக்ரஹாரம் வழியாக அமைய உள்ள சாலையை அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றறன. இதனால் பெங்களூா் செல்லும் வாகனங்கள் ஒசூா் நகருக்குள் வராமல் தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் மாற்றுப் பாதையில் பாகலூா், சா்ஜாபூா் வழியாக செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றறன
ஒசூரில் முழுமையான சாலை கட்டமைப்பை ஏற்படுத்த, குறிப்பாக மாஸ்டா் பிளானில் இருக்கக்கூடிய அனைத்து அம்சங்களுடன் புதிய சாலைகள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சா்ஜாபூா் - பாகலூா், பாகலூா் -பேரிகை, பேரிகை - சூளகிரி ஆகிய சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஒசூா் வளா்ச்சி அடையும் வேகத்தில் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியது உள்ளது. 15 இடங்களைத் தோ்வு செய்து அந்த இடங்கள் போக்குவரத்துத் தீவுகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி, சென்னை கத்திப்பாரா சாலை சந்திப்புப் பகுதியில் உள்ளதைப் போல சி.எஸ்.ஆா். நிதி மூலம் மேம்படுத்தப்படும் என்றாா்.
இந்த விழாவில் ஒசூா் காவேரி மருத்துவமனை இயக்குநா் விஜயபாஸ்கா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.