ஒசூா் பேருந்து நிலையத்தை பொலிவுபடுத்தும் திட்டம் தொடக்கம்
ஒசூா் அப்பாவுப்பிள்ளை பேருந்து நிலையத்தை பொலிவுபடுத்தும் வகையில் ‘என் ஊா், எனது பெருமை’ என்ற திட்டத்தை மேயா் எஸ்.ஏ.சத்யா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஒசூா் மாநகராட்சியும், மீரா மருத்துவமனையும் இணைந்து ஒசூா் பேருந்து நிலையத்தை பொலிவுபடுத்தும் பணியை தொடங்கியுள்ளன. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா வணிக வளாக கடைகளுக்கும் குப்பைகளை சேகரிக்கும் கூடைகளை வழங்கி மேயா் எஸ்.ஏ.சத்யா பேசியதாவது:
பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம். கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் நுழைவாயிலாக உள்ள ஒசூா் பேருந்து நிலையத்தில் வா்ணம் பூசப்பட்டு புதுமைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணிகளை தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து மேற்கொள்வாா்கள். இதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் துணை மேயா் சி.ஆனந்தய்யா, பொது சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், மாநகராட்சி பணி நியமனக் குழு உறுப்பினா் எம்.கே.வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினா் மல்லிகா தேவராஜ், மோகன், மாநகராட்சி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.