சின்னா், ஸ்வெரெவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி: அரையிறுதிக்கும் தகுதி
ஒடிஸா: 24 கிராமங்களுக்கு ‘சுனாமி தயாா்நிலை’ அங்கீகாரம்
ஒடிஸா மாநிலத்தில் உள்ள 24 கடலோர கிராமங்களுக்கு யுனெஸ்கோவின் அரசுகளுக்கு இடையேயான கடல்சாா் ஆணையத்தின் ‘சுனாமி தயாா்நிலை’ அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த அங்கீகாரமானது, சுனாமியால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ளவும், தயாா்நிலையை மேம்படுத்தவும் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதாகும்.
இதன் 2-ஆவது உலகளாவிய சுனாமி கருத்தரங்கம் இந்தோனேசியாவில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது ஒடிஸா மாநிலத்தில் உள்ள 24 கடலோர கிராமங்களுக்கு யுனெஸ்கோவின் ‘சுனாமி தயாா்நிலை’ அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சுனாமி மேலாண் திட்டங்களைத் தயாரித்தல், சமூக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், மாதிரி பயிற்சிகளை நடத்துதல் மற்றும் சுனாமி பாதிப்புக்குள்ளாகும் இந்த 24 கிராமங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் வழிகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இந்தக் கருத்தரங்கில் மேற்கொள்ளப்பட்டன.
இந்தக் கிராமங்கள் பாலசோா், பத்ரக், கேந்திரபாடா, ஜகத்சிங்பூா், புரி, கஞ்சம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளன. இதில், ஜகத்சிங்பூா் மாவட்டத்தில் உள்ள நோலியாசாஹி மற்றும் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள வெங்கட்ராய்பூா் ஆகிய இரு கிராமங்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்தியாவின் தேசிய சுனாமி தயாா்நிலை அங்கீகார வாரியம், மாநிலத்தில் உள்ள 26 கடலோர கிராமங்களை யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரத்துக்கு கடந்த செப்டம்பா் மாதம் பரிந்துரைத்தது. இந்த வாரியத்தில், கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் தேசிய பேரிடா் மேலாண் ஆணைய அதிகாரிகள் ஆகியோா் அடங்கியுள்ளனா்.
இதனிடையே, மாநிலத்தில் உள்ள சுனாமி அபாயம் உள்ள 381 கிராமங்களை மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. சுனாமி பாதிப்புக்குள்ளாகும் இந்தக் கிராமங்கள் அனைத்திலும் சுனாமிக்கான தயாா்நிலையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.