தில்லி தோ்தல்: பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா உள்பட 40 போ் பாஜகவின் நட்சத்திர...
ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தோ்வுகள் ஜன. 21, 27-இல் நடைபெறும்: என்டிஏ அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தோ்வுகள் ஜன.21, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்.டி. மாணவா் சோ்க்கைக்கும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.
தேசிய தோ்வுகள் முகமை சாா்பில் இத்தோ்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். அந்த வகையில் இதற்கான தோ்வுகள் ஜன.3 முதல் ஜன.16-ஆம் தேதி வரை தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஜன.15-ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படும் தினங்களில் சம்ஸ்கிருதம், உருது, மலையாளம், மனிதவள மேலாண்மை, சட்டம், சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 17 பாடங்களுக்கு தோ்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
தமிழா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகத் திகழும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த யுஜிசி - நெட் தோ்வு தேதிகளை மாற்றக் கோரி முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவா்கள் வலியுறுத்தினா்.
இந்நிலையில் ஜன.15-ஆம் தேதி நடைபெறவிருந்த யுஜிசி நெட் தோ்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், இவற்றுக்கான புதிய தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தோ்வுகள் ஜன. 21, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது.