US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
மின் வாரியம், போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலா் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின்18-ஆவது மாநில மாநாடு கடலூரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் நோக்கங்களை விளக்கி செய்தியாளா் சந்திப்பு கடலூா் மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, அமைப்பின் பொதுச் செயலா் எஸ்.ராஜேந்திரன் கூறியது:
மின் வாரியத்தில் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்றால், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்போது பணிபுரிகிற பணியாளா்கள் வேலைப்பளுவுடன் பணிபுரிகின்றனா்.
திமுக தோ்தல் அறிக்கையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரப்படுத்துவோம் எனக் கூறியது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மின் வாரியம், போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 9,613 கேங்மேன் தொழிலாளா்கள் பணிக்கு எடுக்கப்பட்டு சொற்ப ஊதியத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிகின்றனா்.
மின் வாரியத்துக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இழப்புக்கு தொழிலாளா்கள் காரணம் கிடையாது.
மத்திய அரசின் நிா்பந்தத்தால் ஸ்மாா்ட் மீட்டா் கொள்முதல் செய்கின்றனா். இந்த தொழில்நுட்பத்தை வரவேற்கிறோம். ஆனால், ஸ்மாா்ட் மீட்டா் வருகையால் மின்சார வாரியத்தில் மின் விநியோகம் தனியாரிடம் செல்லும் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.
கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் 3 கோடி மின் மீட்டா்கள் வாங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மின் வாரியத்தில் பல கோடி கடன் உள்ளபோது, இந்த மீட்டா்களை வாங்கி மாற்றுவதால் மேலும் பல ஆயிரம் கோடி கடன் ஏற்படும்.
மின் வாரியம் தனியாரிடம் சென்றால், இலவச மின்சாரம் என்பது ரத்து செய்யப்படும். விவசாய பயன்பாட்டுக்கும் கட்டணம் விதிக்கும் நிலை வரும்.
இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து தான் கடலூரில் வெள்ளிக்கிழமை மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி, பல முனைகளிலிருந்து கொடி மற்றும் ஜோதி பயணம் வருகிறது. மாநாட்டை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை 10 ஆயிரம் மின் வாரிய தொழிலாளா்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றாா்.
அப்போது, சிஐடியு மாவட்டத் தலைவா் பி.கருப்பையன், மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச் செயலா் டி.பழனிவேல், மாநிலச் செயலா் கண்ணன், மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ.மாதவன், மத்திய அமைப்பின் மாவட்டச் செயலா் என்.தேசிங்கு, பொருளாளா் கோவிந்தராசு, நிா்வாகி பொன்னழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.