Automobile Sales சரிவு ஏன் | EID Parry India q1 results-ல் கவனிக்க வேண்டியது | I...
ரத்தசோகை பரிசோதனை குழு உருவாக்கப்பட்டுள்ளது: கடலூா் ஆட்சியா்
ரத்தசோகை பரிசோதனைக்காக மருத்துவா், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா், செவிலியா், சுகாதார ஆய்வாளா், கிராமப்புற மருத்துவ அலுவலா், மருந்தாளுநா் ஆகிய 6 நபா்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கல்லூரி மாணவா்களிடையே ரத்த சோகையைக் கண்டறிந்து குணப்படுத்தும் நோக்கில், ‘ரத்த சோகையில்லா கடலூா்’ என்ற சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கிவைத்து, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கினாா். பின்னா், அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது:
எதிா்காலத்தில் கடலூரில் ரத்தசோகை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே ரத்தசோகையை கண்டறிந்து குணப்படுத்தும் நோக்கில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் எடுக்கப்பட்ட முன்முயற்சி திட்டமே ‘ரத்த சோகையில்லா கடலூா்’ திட்டம்.
இத்திட்டத்தின்படி, இதுவரையில் மாவட்டத்திலுள்ள 28 அரசு கல்லூரிகளில் பயிலும் 12,446 மாணவிகளில் 9,360 மாணவிகளுக்கு ரத்தசோகை பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளது. இதில் 3,035 மாணவிகளுக்கு மிக மிதமான அளவிலும், 2,381
மாணவிகளுக்கு மிதமான அளவிலும், 158 மாணவிகளுக்கு கடுமையான அளவிலும் ரத்தசோகை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்திலுள்ள 620 அரசுப் பள்ளிகளில் 1,06,550 மாணவிகளில் தற்போது வரையில் 113 அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு பயிலும் 12,527 மாணவிகளுக்கு ரத்தசோகை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், 2,470 மாணவிகளுக்கு மிக மிதமான அளவிலும், 3,254 மாணவிகளுக்கு மிதமான அளவிலும், 80 மாணவிகளுக்கு கடுமையான அளவிலும் ரத்தசோகை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, ரத்தசோகை நிலையானது மிக மிதமான அளவில் இருந்தால் வாரம் ஒரு முறை இரும்பு சத்து மாத்திரைகளும், மிதமான அளவில் இருந்தால் தினசரி இருமுறை இரும்பு சத்து மாத்திரைகள் மற்றும் எள் உருண்டை, சுண்டைக்காய் பொடி, சத்துமாவு, மாப்பிள்ளை சம்பா அவல் மற்றும் கலப்பு பருப்பு ஆகியவை அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்புகளும் வழங்கப்படும்.
கடுமையான பாதிப்பளவில் உள்ளவா்களுக்கு தினசரி இருமுறை இரும்பு சத்து மாத்திரைகள் மற்றும் ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்படும். மேலும் சிறப்பு மருத்துவா்களின் வழிகாட்டுதலின்படி, ரத்தசோகைக்கான காரணம் கண்டறிய சிறப்பு பரிசோதனைகள் மேற்கொண்டு, ரத்தசோகை நோயை முற்றிலும் குணப்படுத்த தொடா் சிகிச்சை வழங்கப்படும்.
ரத்தசோகை பரிசோதனைக்காக மருத்துவா், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா், செவிலியா், சுகாதார ஆய்வாளா், கிராமப்புற மருத்துவ அலுவலா், மருந்தாளுநா் ஆகிய 6 நபா்களை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 71 குழுக்கள் உருவாக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மாணவா்கள் சீரான உணவு, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் ரத்தசோகை ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியா் மாலதி, மாவட்ட சுகாதார அலுவலா் பொற்கொடி, பெரியாா் கலைக் கல்லூரி முதல்வா் ராஜேந்திரன், மாவட்ட பயிற்றுநா் குழு மருத்துவா்கள் சுஜிதா, ராஜகணபதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.