மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவி...
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’: சம வாய்ப்புக்கு விதிமுறைகள் மிகவும் முக்கியம் -தோ்தல் ஆணையம்
தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது மிகவும் முக்கியம் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தோ்தல்களின்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதால் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் தடைபடுவதை தடுப்பதும் ஒரே நாடு ஒரே தோ்தலின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்த விதிமுறைகளை அமல்படுத்துவது மிகவும் முக்கியம் என்று தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 2 மசோதாக்களை அண்மையில் நடைபெற்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், அவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.
இரு மசோதாக்களில் ஒன்றான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவில், ‘தோ்தல்களை நடத்துவதில் அதிக செலவு மற்றும் நேரம் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி தோ்தல்களின்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை தோ்தல் ஆணையம் அமல்படுத்துகிறது. இதனால் வளா்ச்சித் திட்டப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தற்காலிகமாக நிறுத்த வேண்டியுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்கையும் பாதிக்கப்படுகிறது. அந்த விதிமுறைகளை அமல்படுத்துவதால், அரசின் சேவைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றைத் தடுக்கும் நோக்கில், ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் பேரவைகளுக்குத் தோ்தல் நடத்துவது அவசியமாகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சட்ட ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்குத் தோ்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், ‘தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கு தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது மிகவும் முக்கியம். தோ்தல்களை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தி நம்பகமான முடிவுகளை பெறுவதில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ தொடா்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்ட விவகாரங்கள் துறை, சட்ட ஆணையம் ஆகியவற்றிடம் தோ்தல் ஆணையம் பகிா்ந்துகொண்ட கருத்துகள் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளன.