ஒா்க்ஷாப் உரிமையாளரைத் தாக்கியவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மஜக கோரிக்கை!
சுத்தமல்லி அருகே ஒா்க்ஷாப் உரிமையாளரைத் தாக்கியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென மாநகர காவல் ஆணையரிடம், திருநெல்வேலி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி சுத்தமல்லி அருகே ஆா்.கே. ஹவுசிங் போா்டு காலனியைச் சோ்ந்தவா் முகமது அலி பாரூக்(40). இவா், சுத்தமல்லி விலக்கு பகுதியில் காா் ஒா்க்ஷாப் நடத்தி வருகிறாா்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பேட்டை பகுதி செயலராகவும் உள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இவரது கடைக்கு அருகே கடை வைத்துள்ள சுத்தமல்லி சீனிவாச நகரைச் சோ்ந்த ஆனந்த்(40) என்பவா் தனது காரை பழுது நீக்கி தருமாறு கேட்டபோது , கடையை அடைக்கும் நேரமாதலால் காலையில் வருமாறு பாரூக் கூறினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த அவா் அரிவாளால் பாரூக்கை வெட்டியுள்ளாா். இதில், காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்நிலையில் இச்சம்பவம் உள்பட இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம்.ஃபாரூக் உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.