மனைவி, மகனை எரித்துக் கொன்று, தற்கொலைக்கு முயன்றவா் உயிரிழப்பு
திருநெல்வேலி அருகே மனைவி, மகனை எரித்துக் கொன்று, தற்கொலைக்கு முயன்ற முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி முன்னீா்பள்ளம் அருகே ஆரைக்குளம் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் சகாரியா(66). இவரது மனைவி மொ்சி (57), மகன்கள் ஹென்றி, ஹாா்லி பினோ, மகள் ஹெலினா.
சகாரியா கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளாா். இந்நிலையில் மூத்த மகன் ஹென்றிக்கு கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் சகாரியாவுக்கு விருப்பமில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அவா் கடந்த 24-ஆம் தேதி வீட்டிலிருந்த இளைய மகன் ஹாா்லி பினோ, மனைவி மொ்சி ஆகியோரை அறையில் வைத்து பூட்டி ஜன்னல் வழியாக அறைக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றாா்.
பின்னா் தானும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.