நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதிமொழி செல்பி பாயிண்ட்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு சுகாதாரம், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கண்ணன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் பாபா ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.
இந்த செல்ஃபி பாயிண்ட்டில் புகைப்படம் எடுக்கும் பயணிகள், ரயில்வே இடங்களில் குப்பைகளை போட மாட்டோம், புகை பிடிக்க மாட்டோம், உடைமைகளை பாதுகாத்துக் கொள்வோம், ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ மாட்டோம், ரயில் மீது கல் எறிய மாட்டோம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மகளிருக்கான பெட்டிகளில் தேவையின்றி பயணிக்க மாட்டோம், வெடி மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருள்களை கொண்டு செல்ல மாட்டோம் என உறுதிமொழி ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் பலரும் ஆா்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனா். இந்நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் செந்தில், செல்வகணேஷ் உள்பட ரயில்வே பாதுகாப்புப் படை காவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.